Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

நிலத்தடி பதுங்கு குழிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பறிமுதல்

22/06/2026 04:11 PM

பிரிஸ்பன், 22 ஜூன் (பெர்னாமா) --  ஆஸ்திரேலியாவில் சிட்னிக்கு அருகிலுள்ள ஓர் இடத்தில் நிலத்தடி பதுங்கு குழிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,700 கிலோ கிராம் எடையிலான கோகெய்ன் வகை போதைப் பொருளை அந்நாட்டு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய கோகெய்ன் பறிமுதல் என்று, இன்று அமலாக்கத் தரப்பினர் உறுதிப்படுத்தினர்.

சுமார் 81 கோடியே 60 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பிலான 2,700 கிலோகிராம் கோகெய்ன், போலி அடித்தளங்களைக் கொண்ட மூன்று சரக்குக் கொள்கலன்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஆஸ்திரேலிய மத்திய போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளுக்குப் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் கும்பல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, மேற்குச் சிட்னி புறநகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு முன்னர், 178 கிலோ கிராம் கோகெய்ன் மற்றும் 142 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டன.

இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மொத்த எடை மூன்று டன்களைத் தாண்டியுள்ளது.

மற்றொரு நிலவரத்தில், பொலிவியா எல்லை அருகே திரவ கோகெய்ன் வகை போதைப் பொருள் கலக்கப்பட்டதாக கூறப்படும் சுமார் 260 டன் எடைக் கொண்ட மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற எட்டு லாரிகளை, நேற்று பிரேசில் மத்திய அமலாக்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Timber Shield எனப் பெயரிடப்பட்ட இந்நடவடிக்கை, அமெரிக்கா மற்றும் பொலிவியாவின் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவான FELCN அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

உளவுத் தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையில், மாடோ க்ரோசோ மற்றும் மாடோ க்ரோசோ டொ சுல் எல்லைப் பகுதிகளில் இவ்வாகனங்கள் இடைமறிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, அந்த லாரிகளில் 20 முதல் 50 டன் வரையிலான போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)