Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

ஜோகூர் மாநிலத் தேர்தல்; ம.இ.கா 4 தொகுதிகளில் போட்டி

16/06/2026 06:34 PM

கோலாலம்பூர், 16 ஜூன் (பெர்னாமா) -- ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிட ம.இ.கா-விற்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அண்மையில், தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளுடன் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான மாநிலங்களின் தேர்தல்கள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன், இத்தகவலை  உறுதிப்படுத்தியதாக உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கூறினார். 

கேந்திரத்தை வலுப்படுத்தவும் சீரமைக்கவும், ஜோகூர் மாநில சட்டமன்றத் தொகுதிகள் அனைத்திலும் உள்ள இந்திய மக்களிடம் பிரச்சாரம் செய்யும்போது துல்லியமான தகவல்களை வழங்க ஏதுவாக, இவ்வார இறுதியில் ஜோகூர் பாருவில் சுமார் 150 பேருக்கு இரண்டு நாள்கள் பயிற்சி ஒன்றை ம.இ.கா. ஏற்பாடு செய்யும் என்று டத்தோ முருகையா கூறினார்.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 15-வது ஜோகூர் மாநிலத் தேர்தலில், போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் கெமெலா, கஹாங் மற்றும் தெங்காரோ ஆகிய மூன்றில் ம.இ.கா வெற்றி பெற்ற வேளையில், புக்கிட் பத்துவில் தோல்வியடைந்தது.

இதனிடையே, கட்சியின் உள் வட்டாரங்களின்படி, இத்தேர்தலில் ம.இ.கா கெமெலா, கஹாங் மற்றும் புக்கிட் பத்து ஆகிய தொகுதிகளைத் தற்காத்து போட்டியிடும் அதேவேளையில், தெங்காரோ தொகுதியை அம்னோவுடன் மாற்றிக் கொண்டு பெர்லிங் தொகுதியில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், ம.இ.கா இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது என அந்த வட்டாரம் தெரிவித்தது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]