காங்கோ, 17 ஜூன் (பெர்னாமா) -- காங்கோ ஜனநாயகக் குடியரசின், மூன்று மாகாணங்களில் 808 பேர் எபோலா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அக்குடியரசின் கிழக்குப் பகுதியில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் இந்நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் சென்று வருவதால், தொடர் மோதல்களும் இடம்பெயர்வுகளும் இந்நோய்த்தொற்று பரவும் அபாயத்தை அதிகரித்து வருவதாக ஐ.நா பேச்சாளர் ஸ்டீஃபன் டுஜாரிக் எச்சரித்தார்.
''நீடிக்கும் மோதலின் காரணமாக, சுகாதார வசதிகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், தெற்கு கீவு மாகாணத்தில், ஃபிஸி, உவிரா மற்றும் கலேஹே ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் பதிவாகியுள்ள நிலையில், நேற்று முழுவதும் மோதல்கள் தொடர்ந்ததாக எங்கள் மனிதாபிமானப் பணியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மேலும் சீர்குலைந்து, அதிகமான மக்கள் எந்த உதவியும் இன்றி தவிக்கின்றனர்,'' என்றார் அவர்.
பொதுமக்களைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான, விரைவான மற்றும் தடையற்ற மனிதாபிமான உதவிகளை உறுதி செய்யவும் அனைத்துத் தரப்பினருக்கும் தங்கள் தரப்பு மீண்டும் அவசர அழைப்பை விடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]