Ad Banner
Ad Banner
 பொது

வெளிநாட்டுத் தொழிலாளர் தேவையை அரசாங்கம் ஆழமாகப் பரிசீலிக்கும்

12/06/2026 07:40 PM

ஜாலான் பந்தாய் டாலாம், ஜூன் 12 (பெர்னாமா) -- கூடுதல் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்கள் குறித்து அடுத்தகட்ட முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக, உணவகங்கள் மற்றும் கட்டுமானத் துறை உள்ளிட்ட சில முக்கியத் துறைகளில் நிலவும் வெளிநாட்டுத் தொழிலாளர் தேவையை அரசாங்கம் ஆழமாகப் பரிசீலிக்கும்.

பல்வேறு துறைகளில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறை விண்ணப்பங்களைத் தொடர்ந்து, இதுகுறித்த விவகாரம் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத்  தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

''மேலும், தற்போதைய சூழலில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்பாகத் தேசியக் கொள்கை ஒன்று அமலில் இருப்பதால்,உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.கே மற்றும் பொதுப்பணி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகள், தங்களின் கீழ் உள்ள தொழில்துறைகள் மற்றும் துறைகளிடமிருந்து முழுமையான மற்றும் விரிவான தகவல்களைப் பெறுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொழிலாளர் தேவைகள் குறித்த விவரங்கள், குறிப்பாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பான தேவைகள், வரவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் மேலும் ஆழமாகப் பரிசீலிக்கப்படும்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை அங்காசாபுரியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஃபஹ்மி அவ்வாறு கூறினார்,

வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான எந்தவொரு முடிவும், அரசாங்கத்தின் தற்போதைய கொள்கையைப் பாதிக்காத வகையில், தொழில்துறையின் உண்மையான தேவையின் அடிப்படையிலேயே எடுக்கப்படுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை முக்கியமானது என்றும் அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)