ஈப்போ, 12 ஜூன் (பெர்னாமா) -- ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிராக சுயமாக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மாறாக, தொடர் நடவடிக்கைக்காக புகார்கள் அல்லது அது தொடர்புடைய தகவல்களை போலீசிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ரோஹிங்கியா அகதிகளின் எந்தவொரு முறைகேடு நடவடிக்கைகளையும் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், அதன் பின்னரே தற்போதுள்ள சட்டங்களுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேராக் போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் அல்வி சைனால் அபிடின் தெரிவித்தார்.
''ரோஹிங்கியா அகதிகள் தவறு செய்வதைக் கண்டறிந்தால், பொதுமக்கள் முதலில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அப்போதுதான் போலீஸ் தரப்பு நடவடிக்கை எடுக்க முடியும்,'' என்றார் அவர்.
ஈப்போவில் நடைபெற்ற பேராக் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே.கே தலைவரின் பதவி ஒப்படைப்பு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் டத்தோ முஹமட் அல்வி அவ்வாறு தெரிவித்தார்.
இதுவரை, ரோஹிங்கியா அகதிகள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்கள் அல்லது நடவடிக்கைகள் குறித்து தங்களது தரப்பு எந்தப் புகாரும் பெறவில்லை என்று அவர் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]