சபாக் பெர்னாம், 12 ஜூன் (பெர்னாமா) -- இன்று அதிகாலை சிலாங்கூர், சபாக் பெர்னாமில் உள்ள பாகன் நக்கோடா ஒமார் மீனவக் கிராமத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாட்டைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் ஆற்றில் குதித்தனர்.
அவர்களில் சிலர் சுமார் ஒரு மணி நேரம் நீரில் மூழ்கி ஒளிந்திருந்ததாக போலீஸ் தெரிவித்தது.
நேற்று மாலை தொடங்கிய இச்சோதனையின்போது கோலா சிலாங்கூர் மாவட்டத்திலும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் மொத்தம் 125 நபர்களிடம் தீவிரச் சோதனை நடத்தப்பட்டது.
பாகன் நக்கோடா ஒமார் கடற்பகுதி மற்றும் கடற்கரை ஓரங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இப்பகுதி, சட்டவிரோதக் குடியேறிகள் கடத்தல் மற்றும் பல்வேறு எல்லை தாண்டிய குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் முக்கிய இடமாக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் டி.சி.பி முஹமட் சைனி அபு ஹசான் தெரிவித்தார்.
ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினருக்கு வேலை வழங்கியது மற்றும் அவர்களுக்குப் புகலிடம் அளித்தது, முறையான பயண ஆவணங்கள் இல்லாதது, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருந்தது, சமூகப் பயண அட்டையை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அங்கீகரிக்கப்படாத வழிகளில் நாட்டிற்குள் நுழைந்தது ஆகியவையே இந்தச் சோதனையில் கண்டறியப்பட்ட முக்கிய குற்றங்களாகும் என்று அவர் விவரித்தார்.
மேலும், சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு உள்ளூர் ஆடவர்களும், சபாக் பெர்னாம் கடற்பகுதி வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 28 வெளிநாட்டுப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக முஹமட் சைனி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)