ஜகார்த்தா, 02 ஜூன் (பெர்னாமா) -- இந்தோனேசியா, ஜகார்த்தாவில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு வசிக்கும் சுமார் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்.
ஜியுங் சந்தை அருகே தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் அது அங்குள்ள பகுதிகளில் வேகமாக பரவியதாக நம்பப்படும் நிலையில், பாதுகாப்பு கருதி குடியிருப்பாளர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறினர்.
தீயை அணைக்கும் நடவடிக்கை உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை இரவு மணி 9.05-க்கு தொடங்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 4.15 மணியளவில் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக ஜகார்த்தா தீயணைப்பு மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்தது.
அதற்காக, 35 இயந்திரங்களுடன் சுமார் 175 தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, அந்நிறுவனம் கூறியது.
இதனிடையே, தீ விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழப்புகள் குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கைகளையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)