Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மித்ராவின் உயர்வு மடானி திட்டத்தை வரவேற்கிறது 'மைக்கி'

31/05/2026 08:09 PM

கோலாலம்பூர், 31 மே (பெர்னாமா) -- B40 மற்றும் M40 பிரிவுகளைச் சேர்ந்த இந்திய தொழில்முனைவோர் தங்கள் வியாபாரங்களை விரிவுப்படுத்தும் வகையில், மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா-வின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட, உயர்வு மடானி எனும் புதிய நிதியுதவித் திட்டம் உதவும் என்று நம்பப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அப்பிரிவின் இந்திய தொழில்முனைவோருக்கு, கட்டம் கட்டமாக இத்திட்டம் நிதியுதவியை வழங்குவதாக, மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம், மைக்கி துணைத் தலைவர் டத்தோ ஏ. டி. குமர ராஜா தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, முதற்கட்ட மூலதனம், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் வணிக வலையமைப்புகள் உட்பட தொழில்துறை வழிகாட்டிகளை இத்திட்டம் வழங்குவதாக டத்தோ டாக்டர் ஏ.டி. குமரராஜா கூறினார்.  

இந்நிலையில், B40 மற்றும் M40 பிரிவுகளைச் சேர்ந்த வணிக உரிமையாளர்களுக்கு உயர்வு மடானி திட்டத்தில் உள்ள நிதியுதவிச் சென்றடைவதை மைக்கி உறுதிசெய்ய உதவும் என்று அவர் உத்தரவாதம் அளித்தார். 

கடந்த வெள்ளிக்கிழமை மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்த, அரசாங்கத்தின் ஆறு கோடியே 55 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டை உள்ளடக்கிய மித்ராவின் ஆறு திட்டங்களையும் மைக்கி வரவேற்பதாக குமரராஜா மேலும் கூறினார். 

இந்த முன்னெடுப்பில், இந்திய சமுதாயத்திற்கு வலுவூட்டும் வகையில் நிதியுதவி சலுகைகள், திறன் பயிற்சி மற்றும் சந்தை அணுகல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கியுள்ளன.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]