மகாராஷ்டிரா, 26 மே (பெர்னாமா) -- இந்தியாவில், பல ஆண்டுகளாக மாம்பழம் பயிரிட்டு வரும் விவசாயிகள் சிலர் முதல் முறையாக, தங்களின் விளைச்சலின் வழி, லாபம் ஈட்டுவதில் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
தாமதமான மழையாலும், தரமற்ற இரசாயனங்களாலும் தங்களின் பயிர்கள் சேதமடைவதே இதற்குக் காரணம் என்று அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் இரண்டு கோடியே 80 லட்சம் டன் மாம்பழ உற்பத்தியுடன், இந்தியா உலகின் மிகப்பெரிய மாம்பழ உற்பத்தியாளராக விளங்கியதாக, அந்நாட்டின் ஆராய்ச்சி மற்றும் தரமதிப்பீட்டு நிறுவனம் ஒன்றின் மதிப்பீடுகள் காட்டுகின்றன.
இந்த உற்பத்தியின் மதிப்பு சுமார் 230 கோடி டாலராக மதிப்பிடப்பட்டுள்ளதோடு, 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தச் சந்தை 310 கோடி டாலராக வளரும் என்று இந்திய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.
எனினும், அல்போன்சோ ரக மாம்பழத்திற்குப் பிரசித்தி பெற்ற மற்றும், அதிக விலைக்கு விற்கப்படும் மாநிலமான மகாராஷ்டிராவின் தெற்குக் கடலோரப் பகுதியில், காலநிலை மாற்றம் காரணமாக இந்த முறை உற்பத்தி சரிவுக் கண்டுள்ளது.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலையில் ஏற்பட்ட கடுமையான ஏற்ற இறக்கம், பூக்கள் பூப்பதையும் காய்கள் உருவாவதையும் பாதித்தது.
அதே வேளையில், எல் நினோ வானிலை காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவிய மோசமான வெப்பநிலை, பழங்கள் அதிக அளவில் அழுகிப்போக வழிவகுத்துள்ளதாக அரசாங்க விவசாய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)