Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சகநாட்டவரை கடத்தி பணயத் தொகை கோரியதாக தென் கொரியர்கள் மீது குற்றச்சாட்டு

18/05/2026 01:56 PM

ரவுப், 18 மே (பெர்னாமா) --  கடந்த மாதம், சகநாட்டவரை கடத்தி மூன்று கோடியே 97 லட்சம் ரிங்கிட் பணயத் தொகை கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தென்கொரிய ஆடவர்கள் மூவர் இன்று, ரவுப் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்தனர்.

நீதிபதி நூர் சைஹான் முஹமட் அலி முன்னிலையில் மொழிப் பெயர்ப்பாளரால் கொரிய மொழியில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை 28 வயதான குவோன் கியுங்ரியுல், 40 வயதான குவாக் ஜெயில் மற்றும் கிம் யியோங் ஜோன் ஆகிய மூவரும் மறுத்து விசாரணைக் கோரினர்.

கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி, ஜாலான் கெந்திங் ஹைலன்ஸ் பகுதியில் 40 வயதுடைய தென்கொரிய ஆடவர் ஒருவரை ஒரே நோக்கத்துடன் கடத்தி பணயத் தொகை கோரியதாக அம்மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 30 ஆண்டுகள், அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகைச் செய்யும் 1961-ஆம் ஆண்டு கடத்தல் சட்டம், சட்டம் 374 செக்‌ஷன் 3(1)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் ஜாமின் வழங்கப்படாத நிலையில், ஆவண சமர்ப்பிப்பிற்காக இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு வரும் ஜூன் 29-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)