ஜெராண்டுட், மே 13 (பெர்னாமா) -- கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி, பகாங், ஜெராண்டுட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
திங்கட்கிழமை, மாலை 4 மணியளவில், கோலாலம்பூர், செளகிட்டில் உள்ள ஜாலான் ராஜா லாவுட் மற்றும் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மா ஆகிய இடங்களில் முறையே 23 மற்றும் 63 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஜெராண்டுட் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் டிஎஸ்பி அர்ஷத் அயோப் கூறினார்.
முன்னதாக கொள்ளையடிக்கப்பட்ட, சந்தை விலையின்படி சுமார் 26 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள தங்க காப்புகளையும் மோதிரங்களையும் போலீசார் வெற்றிகரமாக பறிமுதல் செய்ததாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டிஎஸ்பி அர்ஷத் குறிப்பிட்டிருந்தார்.
தொடர் விசாரணைக்கு உதவும் வகையில் சந்தேக நபர்களின் மோட்டார் சைக்கிள், கைப்பேசி, வங்கி அட்டை மற்றும் ஆடைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சந்தேக நபர்களுக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்பதும், சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டிருக்காததும் தெரிய வந்ததாக, அவர் கூறினார்.
கட்டிடத்தில் நுழைந்து கொள்ளையடித்த குற்றத்திற்காக, குற்றவியல் சட்டம் செக்ஷன் 380-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
இதனிடையே, ஜெராண்டுட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் 26,000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்திற்குத் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு ஆடவரைப் போலீசார் தீவிரமாக தேடி வருவதாக, முன்னதாக மே முதலாம் தேதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)