காஜாங், 03 மே (பெர்னாமா) -- சிலாங்கூர், பண்டார் மக்கோத்தா செராஸில் உள்ள ஒரு கால்வாயில் விழுந்து நீரில் மூழ்கியிருக்கலாம் என்று நம்பப்படும் ஒன்பது வயது சிறுமியைத் தேடி மீட்கும் நடவடிக்கை, இன்று மூன்றாவது நாளாக சுங்கை லங்காட் வரை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
தேடல் பணிகள், சம்பவ இடத்தில் இருந்து, ஶ்ரீ ஹிஜாவ் அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்று வட்டாரம் தொடங்கி சுங்கை லங்காட்டுடன் இணையும் சுங்கை லொங் இறுதி வரை ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை விரிவுப்படுத்தப்பட்டிருப்பதாக, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, ஜே.பி.பி.எம் நடவடிக்கைப் பிரிவு அதிகாரி இஸ்மான் அட்னான் கூறினார்.
சுங்கை லங்காட்டில் இருந்து புத்ராஜெயாவில் உள்ள நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை, ஜே.பி.எஸ்-யை நோக்கி 24 கிலோமீட்டர் தூரம் வரை இன்றைய தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, இஸ்மான் கூறினார்.
இதன் மூலம் தேடல் நடவடிக்கை மொத்தம் 29 கிலோமீட்டர் வரை விரிவுப்படுத்தப்பட்டதாக, அவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை, பந்தை எடுக்க முயன்றபோது ஒன்பது வயது சிறுமி, கால்வாயில் விழுந்ததோடு, கனமழை காரணமாக ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் காணாமல் போயிருக்கலாம் என புகாரளிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து தங்கள் தரப்பிற்கு இரவு மணி 7.08-க்கு தகவல் கிடைத்ததாக தீயணைப்பு துறை குறிப்பிட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)