Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சமூக ஊடக் கணக்கைத் தொடங்கும் வயது குறித்த பேச்சுவார்த்தை நிறைவுக்கட்டத்தில் உள்ளது

30/04/2026 03:16 PM

புத்ராஜெயா, ஏப்ரல் 30 (பெர்னாமா) -- சமூக ஊடகக் கணக்கைத் துவங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 16-ஆக அமல்படுத்துவதை முன்னிட்டு, E-K-Y-C எனப்படும் பயனர் அடையாளச் சரிபார்ப்பை செயல்படுத்துவது தொடர்பில், மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான M-C-M-C, சமூக ஊடகத் தளங்களுடனான தனது சந்திப்புக் கூட்டங்களை நிறைவுக்கு கொண்டு வரும் தருவாயில் உள்ளது.

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து, MyDigital ID உட்பட, அனைத்து சமூக ஊடகத் தளங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பல தரப்பினருடன் கலந்துரையாடலை M-C-M-C மேற்கொண்டுள்ளதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''வயது சரிபார்ப்புச் செயல்முறைக்கு அடையாள அட்டை, கடப்பிதழ் மற்றும் MyDigital ID ஆகியவற்றைப் பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும். எனவே, சமூக ஊடகத் தளங்கள் தொடர்பான இந்தச் செயல்முறையை எம்சிஎம்சி ஏறக்குறைய நிறைவுபடுத்தியுள்ளதாக நான் எதிர்ப்பார்க்கிறேன். புதிய கணக்குகள் தொடங்குவதைக் கட்டுப்படுத்துவதற்கான அமலாக்கத் தேதியை நாங்கள் அறிவிப்பதற்கு முன்னதாக எம்சிஎம்சியிடமிருந்து சில தகவல்களைப் பெறுவேன்,'' என்றார் அவர்.

தொடர்பு அமைச்சு அளவிலான 2026 'Jom Baca' நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தப் பின்னர், டத்தோ ஃபஹ்மி செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

சமூக ஊடகங்களில் புதிய கணக்குகளைத் தொடங்குவது 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறிய அவர், அதற்கும் கீழ்ப்பட்ட வயதுடையோருக்கு கணக்குகளைத் தொடங்க அனுமதி முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சமூக ஊடகத் தரப்புடனான கலந்துரையாடல்கள் அனைத்தும் சுமூகமாக நடைபெற்று வரும் வேளையில், அத்தரப்பினரிடமிருந்து இதுவரை நேர்மறையான கருத்துக்களே பெறப்பட்டுள்ளதாகவும் ஃபஹ்மி குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)