Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

'அசான்' மனு விவகாரம்; சிறப்பு சுற்றறிக்கையில் சந்தேக நபரின் பெயர்

26/04/2026 04:25 PM

ஷா ஆலம், ஏப்ரல் 26 (பெர்னாமா) -- சிலாங்கூர், அம்பாங்கில் அசான் தொழுகையினால் ஏற்படும் சத்தம் குறித்து, மனு வழங்கிய விவகாரத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் உள்நாட்டு ஆடவர் ஒருவர், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அவரின் பெயரை சிறப்பு சுற்றறிக்கைப் பட்டியல் ஒன்றில் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அக்குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் சூராவ் செயற்குழு உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்தார்.

"சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால் அவர் மலேசியாவிலிருந்து தப்பிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஒரு சிறப்புச் சுற்றறிக்கைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சிறப்புச் சுற்றறிக்கைப் பட்டியலில் பதிவு செய்யப்படும்போது, ​​அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிரமத்தை எதிர்கொள்வார்கள். ஏனெனில் சந்தேக நபரின் பெயர் விமான நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி இருந்தால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள்," என்றார் அவர்.

இன்று, ஷா ஆலமில் அரச மலேசிய போலீஸ் படை மற்றும் மக்களுடனான அரச சிலாங்கூர் ஓட்டப் பந்தய நிகழ்ச்சியில் கலந்துகொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இச்சம்பவம், நிந்தனைச் சட்டம், செக்‌ஷன் 4 (1) மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்‌ஷன் 233-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)