Ad Banner
 பொது

50%-க்கும் அதிகமான மூத்த குடிமக்களுக்கு இயற்கையாகவே 20 பற்கள்; சுகாதார அமைச்சு இலக்கு

26/04/2026 03:34 PM

கோலா சிலாங்கூர், ஏப்ரல் 26 (பெர்னாமா) -- 2022 முதல் 2030 ஆம் ஆண்டுக்கான தேசிய பல் சுகாதார வியூக திட்டத்திற்கு இணங்க, 2030-ஆம் ஆண்டிற்குள் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான மூத்த குடிமக்கள் இயற்கையாகவே குறைந்தபட்சம் 20 பற்களைத் தக்க வைத்துக் கொள்வதை சுகாதார அமைச்சு இலக்காகக் கொண்டுள்ளது.

முதியதோருக்கான தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பின் அடிப்படையில், முதியவர்களில் 34.3 விழுக்காட்டினர் மட்டுமே இயற்கையாக 20 பற்களைப் கொண்டிருப்பதாகவும், மேலும் 13.9 விழுக்காட்டினர் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் வாய்வழி சுகாதாரக் குறைபாடுகளை எதிர் நோக்கியிருப்பதாகவும், சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

"நான் முன்பே குறிப்பிட்டது போல, பற்கள் நமது உடலுக்கான நுழைவாயில் ஆகும். இந்த நுழைவாயில் சீராகச் செயல்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். மேலும், நோய்த்தொற்றுகள், உணவு போன்ற பல்வேறு விவகாரங்களைக் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். 13.5 விழுக்காட்டினர் வாய்வழிச் செயல்பாட்டில் பல்வேறு தடைகளை எதிர்கொள்ளும்போது, ​​இதுவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் ஒரு கவலையாக உள்ளது," என்றார் அவர்.

இந்த இலக்கை அடைவதை உறுதிசெய்யும் வகையில், Kembara Senyuman எனும் பிரச்சாரத்தை தமது தரப்பு நாடு முழுவதும் தொடங்கும் என்று டாக்டர் சுல்கிஃப்லி கூறினார்.

இப்பிரச்சாரத்தின் வழி சமூகங்கள், பராமரிப்பு மையங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு நேரடியாக செயற்கைப் பல் தயாரிப்பு சேவை வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று கோலா சிலாங்கூர், ஈஜோக்கில் Kembara Senyuman பிரச்சாரத்தை தொடக்கி வைத்தப் பின்னர், சுல்கிஃப்லி செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)