கோலாலம்பூர், ஏப்ரல் 26 (பெர்னாமா) -- நேற்று அதிகாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், பல சட்டவிரோத பாதைகள் மற்றும் போலி நுழைவு முத்திரைகளைப் பயன்படுத்தி இந்தோனேசிய குடியேறிகளைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட கடத்தல்காரர் ஒருவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து,
அம்முயற்சியை மலேசிய குடிநுழைவு துறை வெற்றிகரமாக முறியடித்தது.
கிளந்தானில் இருந்து கிள்ளான் பள்ளதாக்கை நோக்கி விரைவுப் பேருந்தில் வந்த இந்தோனேசிய குறியேறிகள் குறித்து புகார் பெற்றதைத் தொடர்ந்து, சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் குறிப்பிட்டிருந்தார்.
அதிகாரிகளிடமிருந்து தப்பி செல்வதற்காக, சிலாங்கூர் கடல் வழிகளைப் பயன்படுத்தி வந்த தனது செயல்பாட்டு முறையை மாற்றி, படிப்படியாக வான் மற்றும் தரை வழிகளை அக்கும்பல் பயன்படுத்த தொடங்கியிருப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 27 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாவர் என்று டத்தோ சகாரியா கூறினார்.
அதோடு, அவர்கள் ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்ட அக்கும்பலுக்கு தலா 3,500 முதல் 4,000 ரிங்கிட் வரை பணம் செலுத்தியதாக நம்பப்படுவதாக, அவர் குறிப்பிட்டிருந்தார்.
1959/63-ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம், சட்டம் 155-இன் கீழ் விசாரணை மேற்கொள்ள கைது செய்யப்பட்ட அனைவரும் குடிநுழைவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக, டத்தோ சகாரியா குறிப்பிட்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)