கோலாலம்பூர், 24 ஏப்ரல் (பெர்னாமா) -- 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில், மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 விழுக்காடு வாக்குகள் பதிவாகி, புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 2021 தேர்தலை விடச் சுமார் 12 விழுக்காடு அதிகமாகும்.
இந்த அசுரவேக வாக்குப்பதிவு, வரும் மே 4-ஆம் தேதி வெளியாகும் முடிவில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என, அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பெர்னாமா செய்திகளும் அது குறித்த ஆய்வினை மேற்கொண்டது.
பாரம்பரியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே நிலவும் கடும் போட்டிக்கு மத்தியில், புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியின் தனித்துப் போட்டி ஆகியவை இந்தத் தேர்தலை நான்கு முனைப் போட்டியாக மாற்றி இருக்கின்றன.
இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் எழுச்சி, மாநில உரிமைகள், ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை மற்றும் சமூகநீதி எனப் பல காரணங்கள் மக்களின் வாக்குப்பதிவை உச்சத்திற்குத் தள்ளியுள்ளதாக உலக அரசியல் ஆய்வாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, விஜயின் வரவு இளையோர் மத்தியில் மாற்றத்திற்கான முழக்கமாக வாக்குப்பதிவை அதிகரிக்கச் செய்துள்ளதாக அவர் விளக்கினார்.
அமைதியான முறையில் நடந்து முடிந்த இத்தேர்தல், தமிழகத்தின் அடுத்த ஐந்தாண்டு காலத் தலைவிதியைத் தீர்மானிக்கப்போவதோடு ஒரு புதிய அரசியல் திசையை நோக்கி மாநிலத்தை அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது
தவெகவின் வருகையயால், திராவிட கட்சிகளுக்கு எதிரான வாக்குகள் பிளவுப்படும் என்பதால் திமுக, அதிமுக கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக சில அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கும் வேளையில்,
எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் என்ற நிலை வரலாம் என முத்தரசன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேர்தலில் கொங்கு மண்டலம் 92.63 விழுக்காடு வாக்குப்பதிவுடன் புதிய உச்சத்தைத் தொட்டு ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது.
குறிப்பாக, உயிர்பலியால் பெரும் துயரம் நேர்ந்த கரூர் மாவட்டம் 92.63 வாக்குப்பதிவை எட்டி மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ள வேளையில், சேலம் 90.76 விழுக்காட்டிலும், சங்ககிரியில் 92.53 விழுக்காடு வாக்குகளும், பதிவாகியுள்ளன.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)