Ad Banner
Ad Banner
 உலகம்

ஈரானுக்கு எதிராகப் புதிய இராணுவத் தாக்குதல்; அமெரிக்கா பரிசீலித்து வருகிறது

13/04/2026 03:04 PM

வாஷிங்டன் டி.சி, 13 ஏப்ரல் (பெர்னாமா) --  தெஹ்ரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிட மறுத்ததால், பாகிஸ்தானில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிராகப் புதிய இராணுவத் தாக்குதல்களை நடத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வென்ஸ் மற்றும் அவரின் பேராளர் குழுவினர் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த போதிலும் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தன.

அமைதி பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை உடைக்கும் ஒரு நடவடிக்கையாக, ஹொர்முஸ் நீரிணை மீதான அமெரிக்க முற்றுகைகளுக்கு மத்தியில் ஈரானுக்கு எதிராக வரையறுக்கப்பட்ட இராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து டிரம்பும் அவரின் ஆலோசகர்களும் பரிசீலித்து வருகின்றனர்.

பதற்றம் தொடர்ந்து அதிகரித்தால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் குறிவைக்கப்படலாம் என்று டிரம்ப் கூறினார்.

உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 விழுக்காடு தினமும் கடந்துசெல்லும் குறுகிய நீர்வழியான ஹொர்முஸ் நீரிணையில் வாஷிங்டன் தனது முற்றுகைத் திட்டத்தைத் தொடர்வதாகவும் அறிக்கையில் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெனிசுலாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட இதேபோன்ற உத்தியைச் சுட்டிக்காட்டி, இந்தத் தடைகள் தெஹ்ரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வழிவகுக்கக்கூடும் என்று சில ஆலோசகர்கள் நம்புகின்றனர்.

எனினும், இந்த அணுகுமுறையில் அபாயங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஈரானுடனான போர் நிறுத்தம் "நன்றாகவே பின்பற்றப்படுகிறது" என்றும், அமெரிக்கக் கடற்படை ஹொர்முஸ் நீரிணையை முற்றுகையிடத் தொடங்கும் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான தொடர் பேச்சுவார்த்தைகள் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதால் நிலையற்ற இரண்டு வார கால போர் நிறுத்தம் அச்சுறுத்தலுக்கு உள்ளான நிலையில், அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Air Force One விமானத்திலிருந்து இறங்கிய பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசிய டிரம்ப், ஹொர்முஸ் நீரிணை தொடர்பாக "மிக நல்ல விஷயங்கள்" நடந்து வருவதாகக் கூறினார்.

உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை மணி 10-க்கு இந்த முற்றுகை அமலுக்கு வரும் என்று டிரம்ப் கூறினார்.

ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்து கடல்வழிப் போக்குவரத்திற்கும் திங்கட்கிழமை முதல் முற்றுகையைத் தொடங்கவுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)