Ad Banner
Ad Banner
 உலகம்

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 15 பேர் பலி

06/04/2026 05:20 PM

லெபனான், 06 ஏப்ரல் (பெர்னாமா) -- சிரியாவுடனான லெபனானின் முக்கிய எல்லைக் கடக்கும் பகுதியை குண்டு வீசித் தகர்ப்போம் என்று அச்சுறுத்தி, இஸ்ரேல் அவ்வழியை மூட வைத்த ஒரு நாள் கழித்து, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

பெய்ரூட்டில், ஜெனா பகுதியில் நடந்த தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதோடு 52 பேர் காயமடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

ஐன் சாடேவில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்ட நிலையில், கஃபர் ஹட்டாவில் நடந்த தாக்குதலில் நான்கு வயதுக் குழந்தை உட்பட எழுவர் கொல்லப்பட்டனர்.

லெபனானின் மிகப்பெரிய பொது மருத்துவமையமான ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஜெனாவில் அத்தாக்குதல் நடத்தப்பட்டது.

மூன்று சூடான் பிரஜைகள் மற்றும் 15 வயது சிறுமி உட்பட நான்கு சடலங்களையும், காயமடைந்த 31 பேரையும் தங்கள் தரப்பு பெற்றதாக அம்மருத்துவமனையின் துணைத் தலைவர் சாகாரியா தவ்பே தெரிவித்தார்.

ஈரானின் ஆதரவுடன் ஹிஸ்புல்லா ஆயுதக் குழு மத்திய கிழக்கு போரில் இணைந்ததைத் தொடர்ந்து, மார்ச் 2-ஆம் தேதி முதல், லெபனான் முழுவதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களையும், தெற்கில் தரைவழிப் படையெடுப்பையும் நடத்தியுள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேலியத் தாக்குதல்களில் 126 குழந்தைகள் உட்பட 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதோடு, பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)