கோலாலம்பூர், ஏப்ரல் 03 (பெர்னாமா) -- ஒரு சுவரையும் கண்கவர் படைப்பாக மாற்றும் தனிச்சிறப்புக் கொண்டது, MURAL PAINTING என்று பலரால் அறியப்படும் சுவரோவியம்.
பழங்காலத்து கலையாக இருந்தாலும், பல ஓவியக் கலைஞர்கள் இன்னும் அதனை வரைந்து வருவதோடு, ஒரு வேலையாகவும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், வண்ணங்களாலும் தூரிகைகளாலும் ஓவியத்துடன் உணர்வுகளை வெளிப்படுத்தும் இக்கலையின் சவால்கள் மற்றும் சிறப்புகள் குறித்த சுவரோவியக் கலைஞரின் நேர்காணல், தொடர்ந்து இடம் பெறுகிறது.
முந்தைய காலங்களில் கோவில்கள், வீடுகள், அரண்மனைகளின் சுவர்களில் மட்டுமல்லாது சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் போன்றவை சுவரோவியமாகவே இருந்து வந்தன.
இக்கலை கதைகள், ஆன்மீக போதனை மற்றும் ரசனையை அழகாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
அதன் பின்னர், அச்சிடுதல் முறை வந்தவுடன், சுவரோவியம் குறையத் தொடங்கினாலும், இன்னும் பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருவதாக கெடா, கூலிமை பூர்வீகமாகக் கொண்ட சுவரோவியக் கலைஞர் ஷாந்தினி பரமசிவன் தெரிவித்தார்.
கொவிட்-19 பெருந்தொற்று காலக்கட்டத்தில், குறுகிய நேரமாக இக்கலையில் ஈடுபட்டு, தற்போது அதனை முழு நேரப்பணியாக மேற்கொண்டு வருகிறார்.
''ஒருவருக்கு வரைந்த சுவரோவியத்தை மற்றொருவருக்கும் வரைவது மிகவும் கடினம். நிறைய பேர் சுவரோவியத்தை வரவேற்கத் தொடங்கியுள்ளனர். கையினால் வரைவதுதான் சுவரோவியம். சிலர் டிஜிட்டலாக அச்சிடுவதை சுவரோவியம் என்று புரிந்துக் கொள்கின்றனர்,'' என்றார் அவர்.
ஒரு சுவரோவியத்தை முழுமைப்படுத்துவதற்கு இரண்டில் இருந்து மூன்று நாட்கள் தேவைப்படும்.
வாடிக்கையாளர்களின் வீடு, கடைகள் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று இந்த சுவரோவியத்தை வரைய வேண்டும்.
குறிப்பிட்ட இடம், நேரம் உட்பட பல சூழ்நிலைகள் சுவரோவியக் கலைஞருக்கு சவாலாக இருக்கும்.
அவை அனைத்தையும் எதிர்கொண்டு, பல ஆண்டுகளுக்கு ஓவியம் தரமாக இருக்க கவனமாக செயல்பட வேண்டும் என்று பல்லூடக வடிவமைப்புத் துறையின் இளங்கலைப் பட்டதாரியான ஷாந்தினி விளக்கினார்.
''மற்றவரின் வீடுகளுக்குச் சென்று ஓவியம் வரைய வேண்டும். வெளிச்சம் உட்பட பல விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். குறிப்பாக கட்டுமான பணிகள் இருக்கக்கூடாது. ஏனென்றால், தூசுகள் வண்ணத்தின் ஈரத்தில் ஒட்டுவதற்கு சாத்தியம் உள்ளது,'' என்றார் அவர்.
இந்திய சமுதாயத்தில் இக்கலைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றன.
அதே வேளையில், நிறைய சுவரோவியக் கலைஞர்கள் உருவாகி வருவதைக் காண முடிவதாக ஷாந்தினி தெரிவித்தார்.
பெர்னாமா செய்திகள் உடனான கலை சங்கமம் அங்கத்திற்கான சிறப்பு நேர்காணலில், அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)