புதுடெல்லி, 02 ஏப்ரல் (பெர்னாமா) -- உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட தடைகள் காரணமாக ஆறு ஆண்டுகள் தாமதமான தனது மக்கள்தொகைக் கணக்கெடுப்பை, ஓராண்டு காலத்தில் நடத்தவுள்ளது.
முதலில் 2021-ல் நடத்தப்படவிருந்த, பத்தாண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, புதன்கிழமை தொடங்கியது.
இணையவழியில் தங்களைப் பதிவு செய்ய விரும்பும் குடிமக்களுக்குக் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
முந்தைய மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின்படி, 36 மாநிலங்கள் மற்றும் கூட்டரசுப் பிரதேசங்கள், 7,092 துணை மாவட்டங்கள், 5,128 சட்டப்பூர்வ நகரங்கள், 4,580 கணக்கெடுப்பு நகரங்கள், சுமார் ஆறு லட்சத்து 39,902 கிராமங்களில் நடத்தப்படும் இந்த மாபெரும் பணியில் 30 லட்சத்திற்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர்.
வீடு வீடாகச் சென்று நடத்தப்படும் நேரடிக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.
முதல் கட்டத்தில் வீடுகளும் அவற்றின் நிலைமைகளும், இரண்டாம் கட்டத்தில் குடியிருப்பாளர்களும் அவர்களின் பொருளாதார மற்றும் சமூக அளவுகோல்களும் பட்டியலிடப்படும் என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் இந்தியா, சீனாவை முந்தியதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடுத்த மார்ச் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)