Ad Banner
Ad Banner
 பொது

வெப்பமான, வறண்ட வானிலை முன்னறிவிப்பு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்

02/04/2026 06:01 PM

கோலாலம்பூர், 02 ஏப்ரல் (பெர்னாமா) -- செயற்கை மழைப் பொழிவு தேவையை மதிப்பீடு செய்வதற்காக வட தீபகற்பத்தில் நிலவக்கூடிய வெப்பமான மற்றும் வறண்ட வானிலை முன்னறிவிப்பு குறித்த அறிக்கை,  அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய, மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா தொடர்ந்து வானிலை அறிக்கைகளையும் முன்னறிவிப்புகளையும் வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர்  டத்தோ ஆர்தர் ஜோசப் குரூப் கூறினார்.

எந்தவொரு எதிர்பாராத நிகழ்வையும் எதிர்கொள்ள முக்கிய நிறுவனங்கள் சிறந்த முறையில் தயாராவதற்கு, துல்லியமான கணிப்புகள் மிகவும் அவசியமானவை என்று அவர் விளக்கினார்.

''எனவே, தொடர்ந்து அறிக்கைகளையும் முன்னறிவிப்புகளையும் வெளியிடுமாறு நான்  மலேசிய வானிலை ஆய்வு மையத்தை அறிவுறுத்தியுள்ளேன். இந்த முன்னறிவிப்புகள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் அவை சுற்றுச்சூழல் துறை, சுகாதார அமைச்சு மற்றும் நட்மா போன்ற நமது பிற நிறுவனங்கள் முழுமையான தயார் நிலைகளைச் செய்ய உதவும்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

வியாழக்கிழமை, வனவியல் பயிற்சி நிறுவனத்தின் 100-வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

எடுக்கப்படவிருக்கும் முடிவுகள் தொடர்பான தகவல்களையும், அண்மைய நிலவரங்களையும் அரசாங்கம் அவ்வப்போது தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)