பாக்டாட், 02 ஏப்ரல் (பெர்னாமா) -- 2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றுள்ளதை ஈராக் கொண்டாடியது.
தகுதிச்சுற்று போட்டியில் அது 2-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தி 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாகத் தனது இடத்தை உறுதி செய்தது.
ஈராக் தலைநகரைச் சுற்றியுள்ள பிரதான வீதிகளில் திரண்ட ஆதரவாளர்கள், நாட்டின் கொடிகளை அசைத்து, ஆரவாரம் செய்து, நடனமாடி அவ்வெற்றியைக் கொண்டாடினர்.
1986-ஆம் ஆண்டு முதல் இந்த இலக்கு ஈராக் கண்ட கனவு என்று ஆதரவாளர்கள் சிலர் கூறினர்.
பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், உலகின் மிக உயர்ந்த போட்டிக்குத் தகுதிபெறும் திறன் ஈராக்கிற்கு உண்டு என்பதை அனைவருக்கும் நிரூபித்த புதிய தலைமுறை தேசிய வீரர்களையும் அவர்கள் பாராட்டினர்.
இந்த ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் வெற்றி கோலை அடித்த அய்மென் ஹுசேன் ஆட்ட நாயகனாக உருவெடுத்தார்.
கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் 2026 உலகக் கிண்ண போட்டிக்கு, ஈராக் 48-வது அல்லது இறுதி அணியாகத் தகுதி பெற்றது.
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை பிரான்ஸ், நார்வே மற்றும் செனகல் ஆகிய நாடுகளுடன் I குழுவில் ஈராக், போட்டியிடும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)