ஜோகூர் பாரு, 05 ஏப்ரல் (பெர்னாமா) -- ஈரான் மீதான போர் மற்றும் காசாவில் மோதல் தொடர்பான உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, தூதரக உறவுகளை வலுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்.
மாறாக, சில தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு, நாட்டின் தூதரக உறவுகளை வலுப்படுத்த உதவியதால், மலேசியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முடிந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
''ஹோர்முஸ் நீரிணை வழியாக எங்களுக்கு வழிவிட ஈரானிய அதிபரை சம்மதிக்க வைப்பது எளிதானதா? முந்தைய அரசாங்கம் ஈரானுடன் நல்லுறவில் இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால், அது இப்போது நம்மிடம் உள்ள அரசாங்கத்தைப் போன்றது அல்ல. நாம் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கலாம், இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கலாம், ஈரான் போர் தொடர்பாக மலேசியா வெளியிட்டதைப் போன்ற உறுதியான அறிக்கைகளை உலகில் எத்தனை நாடுகள் வெளியிடுகின்றன என்று பார்க்க முயற்சி செய்யலாம்,'' என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாருவில் நடைபெற்ற ஜோகூர் மாநில கெஅடிலான் மாநாட்டில் உரையாற்றியபோது டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.
தமது முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் மதிப்பளிக்காதது குறித்து பிரதமர் வருத்தம் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)