புத்ராஜெயா, 31 மார்ச் (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டில் எஸ்.பி.எம் தேர்வு எழுதாத 8,108 பேருடன் ஒப்பிடுகையில், 2025 ஆண்டு குறைந்தது ஆறு பாடங்களுக்கு 7,099 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
இந்த எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குறைந்துள்ள நிலையில், இது ஒரு நல்ல முன்னேற்றத்தை காட்டுவதாக கல்வித் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹமட் அசாம் அஹ்மாட் தெரிவித்தார்.
''உண்மையில், தேர்வுக்கு வராமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. வேலை, வெளிநாடு செல்வது, விபத்துகள், குடும்பப் பிரச்சனைகள், உடல்நலக் கோளாறு, போக்குவரத்துச் சிக்கல்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் அமலாக்கத் தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்கள் என்று பல காரணங்கள் உள்ளன. எனவே, நாங்கள் ஆண்டு தொடக்கத்திலேயே எஸ்.பி.எம் தேர்வுக்குப் பதிவு செய்யத் தொடங்கிவிடுவோம். எஸ்.பி.எம் தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும். எனவே, அந்த நீண்ட கால இடைவெளியில் பல காரணங்கள் ஏற்படலாம்,'' என்றார் அவர்.
மாணவர்கள் தேர்வுக்கு அமர்வதை உறுதி செய்ய மாநில கல்வி துறை, மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகள் உட்பட அனைத்து நிலைகளிலும் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்காக பல்வேறு தலையீடு மற்றும் வழிக்காட்டு திட்டங்களை கல்வி அமைச்சு செயல்படுத்தியிருப்பதாக டாக்டர் முஹமட் அசாம் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)