அலோர் ஸ்டார், 31 மார்ச் (பெர்னாமா) -- கடந்த புதன்கிழமை கூலிம் Hi-Tech Park தொழிற்சாலை கட்டுமானப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவும் பொருட்டு, இணையத் தள செய்தியாளர் ஒருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டதைப் போலீஸ் உறுதி செய்துள்ளது.
அவர்களில் எண்மர் கடந்த சனிக்கிழமையும், எஞ்சிய இருவர் திங்கட்கிழமையும் கைது செய்யப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.
20 முதல் 40 வயதுக்கு உட்பட்ட அவர்கள் அனைவரும் தனியார் சொத்து அல்லது நிலத்தில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக, குற்றவியல் சட்டம், செக்ஷன் 447-இன் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக டத்தோ அட்ஸ்லி கூறினார்.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி, பிற்பகல் மணி 3.15 அளவில் எட்டு கார்களில் வந்த சுமார் 10 முதல் 12 நபர்கள் கட்டுமானப் பணியில் இருந்த தொழிற்சாலை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அங்கு பணியில் இருந்த இரண்டு பாதுகாவலர்கள், அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தும், அவர்கள் அதை மீறி நுழைந்துள்ளனர்.
முன்னதாக கைது செய்யப்பட்ட எண்மர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதக் குடியேறிகள் குறித்து செய்தி சேகரிப்பதற்காக அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் தினதந்தி என்ற தமிழ் இணையத் தள செய்தியாளர் காளிதாஸ் சுப்பிரமணியம், கூலிம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)