இஸ்லாமாபாத், 30 மார்ச் (பெர்னாமா) -- தரைவழித் தாக்குதலுக்கு வாஷிங்டன் தயாராகி வருவதாக தெஹ்ரான் முன்னதாக குற்றம் சாட்டிய நிலையில், ஈரான் மீதான மோதலை முடிவுக்குக் கொண்டு வர இன்றும் சில நாள்களில் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை ஏற்று நடத்த தமது தரப்பு தயாராகி வருவதாக பாகிஸ்தான் நேற்று அறிவித்துள்ளது.
வட்டார வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் அதனைத் தெரிவித்துள்ளார்.
அவ்வட்டாரத்தில் போரை விரைவாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும், இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ள அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக இஷாக் டார் கூறினார்.
''தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலுக்கு ஒரு விரிவான மற்றும் நீடித்த தீர்வைக் காண்பதற்காக வரும் நாட்களில் இரு தரப்பினருக்கும் இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும், அவற்றுக்கு வழிவகுப்பதற்கும் பாகிஸ்தான் பெருமை கொள்ளும். சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஈ உடன் நான் தொலைபேசியில் விரிவான உரையாடல் நடத்தினேன். ஈரான்-அமெரிக்கப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் பாகிஸ்தானின் முயற்சியை சீனா முழுமையாக ஆதரிக்கிறது'', என்றார் அவர்.
இருப்பினும், அப்பேச்சுவார்த்தையில் அமெரிக்காவும் ஈரானும் கலந்துகொள்ள இணக்கம் தெரிவித்தனரா என்பது கூறப்படவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)