Ad Banner
Ad Banner
 பொது

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து மூன்று சடலங்கள் கண்டெடுப்பு

26/03/2026 06:48 PM

சுங்கைப் பட்டாணி, 26 மார்ச் (பெர்னாமா) --  கெடா, மெர்போக் கம்போங் பெலாவ் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று நள்ளிரவில் வந்த துர்நாற்றம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சடலங்களைக் கண்டெடுக்க வழிவகுத்திருக்கின்றது.

இச்சம்பவம் குறித்த தகவல், நேற்று பின்னிரவு மணி12.30 அளவில் பொதுமக்களால் தமக்கு தெரிய வந்தாகவும், கடந்த மூன்று நாள்களாக அவ்வீட்டில் இருந்தவர்களைக் காணவில்லை என்றுகூறப்பட்டதாகவும் கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹஞான் ரம்லான் தெரிவித்தார்.

65 வயது சிக்ரி அப்துல் ரஹ்மான், 53 வயதான அவரின் மனைவி சுராயா மான் மற்றும் அப்பெண்ணின் முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த 29 வயது மகன் ஆகியோரே அந்த மூவர் என்று ஏசிபி ஹஞான் ரம்லான் கூறினார்.

அந்தத் தம்பதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியதாக அறியப்படுகிறது.

''முதற்கட்ட ஆய்வில், மிகவும் கடுமையான துர்நாற்றம் வீசியது உண்மைதான். நாங்கள் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது, ​​சமையலறைப் பகுதியில் தரைவிரிப்பு மற்றும் துணியால் மூடப்பட்டிருந்த ஒரு பொட்டலத்தைக் கண்டோம். சமையலறையை அடைவதற்கு முன்பே, நாங்கள் கதவைத் திறந்தவுடன் வரவேற்பறையில் இரத்தம் இருப்பதைக் காண முடிந்தது,'' என்றார் அவர்.

தம்பதியரின் தலைகள் வெட்டப்பட்டு, உடல்களுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் கை கால்கள் துண்டிக்கப்பட்டிருந்தாக நம்பப்படுகிறது.

வீட்டின் மேல் தளத்தில் சுராயா மானின் மகனின் உடல் இரத்தம் சிந்தியவாறு,
கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

சுராயா மானின் மற்றொரு மகன் ராணுவ வீரராகப் பணிபுரியும் நிலையில், நோன்புப் பெருநாள் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, கடந்த திங்கள்கிழமை அவர் ஜோகூருக்கு திரும்பியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், இது ஒரு கொலை வழக்கு என்றும், சந்தேக நபரான அவர்களின் மகன் இறந்துவிட்டதாகவும் நம்பப்படுகிறது.

அனைத்து உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதோடு, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)