புது டெல்லி, 26 மார்ச் (பெர்னாமா) -- ஈரான் போரினால் ஏற்பட்டிருக்கும் சமையல் எரிவாயு பற்றாக்குறை குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, இந்தியாவின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு வெளியில் போராட்டம் நடத்தினர்.
''வெற்று எரிவாயு கலன்கள், வெற்று வாக்குறுதிகள்" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திவாறு அவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகம் தடைபட்டதைத் தொடர்ந்து, திரவ பெட்ரோலிய எரிவாயு, எல்.பி.ஜி-ஐ உலகில் இரண்டாவது மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடான இந்தியா, பத்தாண்டுக்கு மேல் இல்லாத மிக மோசமான அளவுக்கு எரிவாயு நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
சிறு நகரங்களில் எல்.பி.ஜி-க்காக நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும், இந்த நெருக்கடியைக் கையாள அரசாங்கம் அதற்கான திட்டங்களை வெளியிட வேண்டும் என்றும் ஜர்கண்ட் முக்தி மோர்சா சட்டமன்ற உறுப்பினர் மஹுவா மாஜி கூறினார்.
இந்தியா கடந்த ஆண்டு மூன்று கோடியே 31 லட்சத்து 50,000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தியது.
அதில், தேவைக்காக சுமார் 60 விழுக்காடு இறக்குமதி செய்யப்பட்டது.
அந்த இறக்குமதிகளில் சுமார் 90 விழுக்காடு மத்திய கிழக்கிலிருந்து கொண்டு வரப்பட்டன.
இதனிடையே, மக்கள் பீதியுடன் பொருள்களை வாங்குவதைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் கூறிவரும் நிலையில் தற்போது எரிபொருளுக்கும் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற பதற்றமும் அவர்களிடையே நிலவியுள்ளது.
மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில இந்திய மாநிலங்களில், எரிபொருள் நிலையங்களைக் கடந்து வரிசைகள் நீண்டிருப்பதோடு, அதனை நிரப்ப பல மணி நேரங்களாக காத்திருக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)