Ad Banner
Ad Banner
 பொது

கெடாவின் மூன்று மாவட்டங்களில் தற்போது இரண்டாம் கட்ட வெப்ப அலை

25/03/2026 04:12 PM

கோலாலம்பூர், 25 மார்ச் (பெர்னாமா) -- கெடாவில் உள்ள மூன்று மாவட்டங்களில் தற்போது இரண்டாம் கட்ட வெப்ப அலை பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதே வேளையில் தீபகற்ப மலேசியா முழுவதும் உள்ள இதர 16 பகுதிகளில் இன்று காலை நிலவரப்படி பாதுகாப்பை நிலைநிறுத்தி முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன

கெடாவில் பொக்கொக் செனா, பெண்டாங் மற்றும் பாலிங் (Pokok Sena, Pendang, Baling) ஆகியவை இரண்டாம் வெப்ப நிலையை எதிர்கொண்டு வருவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட் மலேசியாவின் வெப்ப வானிலை நிலவர அறிக்கை கூறுகிறது.

அதைத் தொடர்ந்து, கெடாவில் உள்ள சிக், பாடாங் தெராப், குபாங் பாசு, லங்காவி, கோலா முடா, கூலிம், பண்டார் பரு (Sik, Padang Terap, Kubang Pasu, Langkawi, Kuala Muda, Kulim, Bandar Baharu) ஆகிய பகுதிகளிலும் பெர்லிஸ் மற்றும் பினாங்கில் உள்ள 16 வட மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் முதலாம் கட்ட வெப்ப நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராக் மாநிலத்தில் உலு பேராக், செலாமா, கிந்தா கோலா கங்சார் (Hulu Perak, Selama, Kinta, Kuala Kangsar) ஆகிய பகுதிகளிலும் பகாங்கில் ஜெராண்டுட், ராவுப் (Jerantut, Raub) ஆகிய பகுதிகளிலும் அதே நிலை பதிவாகியுள்ளது.

குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக அதிகபட்ச வெப்பநிலை, அதாவது 37 முதல் 40 செல்சியஸ் பாகை வரம்பில் இருக்கும் வேளையில், அப்பகுதி இரண்டாம் கட்ட வெப்ப அலை பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

அதேவேளையில், தொடர்ச்சியாகக் குறைந்தது மூன்று நாள்களுக்குத் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 பாகை செல்சியஸ் வரை இருப்பது கண்டறிந்தால், அது முதலாம் கட்ட வெப்ப அலையாக வகைப்படுத்தப்படுகிறது.

இதனிடையே, புலாவ் செபாதிக் (Pulau Sebatik) பகுதியை உட்படுத்திய மாவட்டம், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தவாவ் (TAWAU) மாவட்ட பேரிடர் நிர்வாகக் குழு இன்று அறிவித்தது.

அக்குழுவின் தலைவரும், தவாவ் நகராண்மைக் கழகத் தலைவருமான டத்தோ ஜோசப் பாங் இன்று காலையில் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மாவட்ட பேரிடர் நிர்வாகக் குழுவில் உள்ள சம்பந்தப்பட்ட அறிக்கைகள் மற்றும் கள நிலவரங்களை ஆராய்ந்த பிறகே, இம்முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோ ஜோசப் தெரிவித்தார்.

அத்தகவல்களின் அடிப்படையில், குறிப்பிட்ட பகுதி நீண்டகால வறண்ட வானிலையை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்;.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)