Ad Banner
Ad Banner
 பொது

OPS HRA: 14,455 வாகனங்கள் மீது நடவடிக்கை

24/03/2026 03:44 PM

ஈப்போ, 24 மார்ச் (பெர்னாமா) - நேற்றைய நிலவரப்படி, நோன்பு பெருநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட Ops HRA 2026 நடவடிக்கையின் மூலம், சுமார் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 479 வாகனங்கள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில், 14 ஆயிரத்து 455 வாகனங்கள் மீது சாலை போக்குவரத்து துறை, ஜேபிஜே நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக  ஜேபிஜே  தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி  கூறினார்.

பல்வேறு குற்றங்களுக்காக தனியார் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வாகனங்கள், பொது வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஜேபிஜே (P)22 அறிவிக்கை, ஆய்வுக்கான கட்டளை அறிவிக்கை உட்பட செக்‌ஷன் 114-இன் கீழ் விசாரணை அறிவிக்கை மற்றும் 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 33,402 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

"மூன்று மிகப் பெரிய குற்றங்கள் பதிவுச் செய்யப்பட்டது. அதாவது, வாகன இருக்கை பட்டை அணியாதது. மொத்தம் 761 குற்றங்கள். அதோடு, அதிக எடைக் கொண்ட வாகனம் 353 குற்றங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாதது. சிவப்பு நிற சமிக்ஞை விளக்கைப் பின்பற்றாத குற்றங்கள் மொத்தம் 317" என்றார் அவர்.

நேற்றிரவு, ஈப்போ, மெனோரா கட்டுப்பாட்டு மையத்தில் Ops HRA சோதனை நடவடிக்கையைப் பார்வையிட்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, ஜோகூரில் 881, பகாங்கில் 264 மற்றும் பேராக்கில் 207 குற்றங்கள் பதிவாகியுள்ள நிலையில், அவற்றில் வாகன இருக்கை பட்டை அணியாதது மற்றும் வாகனத்தை ஓட்டும்போது கைத்தொலைப்பேசி பயன்படுத்துவது ஆகிய குற்றங்களும் அடங்கும் என்று ஃபட்லி ரம்லி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)