Ad Banner
Ad Banner
 பொது

இணையவழி மோசடி; மலேசியர்கள் மூவர் உட்பட 49 பேர் கைது

24/03/2026 03:29 PM

ஃபனோம் பென் , 24 மார்ச் (பெர்னாமா) - இணையவழி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மலேசியர்கள் மூவர் உட்பட 49 சந்தேக நபர்களை கம்போடிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை, ஃபனோம் பென் தலைநகரில் நடத்தப்பட்ட இச்சோதனையின் போது, 46 மலேசிய சிம் அட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அக்கும்பல், போலி முதலீட்டுத் திட்டங்கள் மூலம் மலேசியர்களையும் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களையும் ஏமாற்றுவதற்காக, கம்போடியாவைத் தனது செயல்பாட்டுத் தளமாகப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில்  சீனாவைச் சேர்ந்த 43 பேர், மூன்று மலேசியர்கள், வியட்நாமியப் பெண் ஒருவர், மியான்மர் பெண் ஒருவர் மற்றும் கம்போடியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் அடங்குவர் என்று போலீஸ் தெரிவித்திருக்கிறது.

ஏப்ரல் மாதத்திற்குள் மோசடி நடவடிக்கைகளை ஒழிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்துள்ள நிலையில், இணைய மோசடிகள் மற்றும் சட்டவிரோத சூதாட்ட மையங்கள் மீது “XXL நடவடிக்கை” என்ற பெயரில் கம்போடியப் போலீஸ் படை விரிவான சோதனைகளை நடத்தி வருகின்றது.

அண்மைய சோதனை நடவடிக்கையில், 60 கணினிகள், ஒரு மடிக்கணினி, 687 கைபேசிகள் மற்றும் 46 மலேசிய சிம் அட்டைகளை போலீஸ் பறிமுதல் செய்தது.

இணைய குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் 30,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நாடு கடத்தப்பட்டதாக கம்போடிய உள்துறை அமைச்சு கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)