கோலாலம்பூர், 22 மார்ச் (பெர்னாமா) -- மேற்காசியாவில் ஏற்பட்ட மோதல்களால் உலக எண்ணெய் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் அரசாங்க உதவித்தொகை சுமார் 70 கோடி ரிங்கிட்டிலிருந்து 320 கோடி ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.
தற்போது அதிகரிக்கும் நிச்சயமற்ற சூழலில், மக்களின் நலனையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதற்கு மடானி அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
BUDI மடானி ரோன்95 திட்டம், BUDI95-இன் கீழ், உதவித்தொகை வழங்கப்படுவதால், மக்களும் பெரும்பாலான வர்த்தகர்களும் தற்போதுள்ள சந்தை விலையைச் செலுத்த வேண்டியதில்லை என்று பிரதமர் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் மோதலைத் தொடர்ந்து உலக எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது.
இதனால் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான மலேசியாவும் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து பலர் கேள்வி எழுப்பியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை, மோதல்களால் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் உலகின் எண்ணெய் விநியோகம் குறைந்து விலை கடுமையாக உயர்ந்ததாகவும் அவர் விளக்கினார்.
நாட்டின் எண்ணெய் இறக்குமதி சுமார் 50 விழுக்காடு ஹோர்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படுவதால் மலேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]