Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மாணவர் மரணம்: இந்தோனேசிய தொழிலாளர் மீது குற்றச்சாட்டு

18/03/2026 04:51 PM

தெலுக் இந்தான், 18 மார்ச் (பெர்னாமா) -- கடந்த வாரம் தெலுக் இந்தான் விவசாய தொழிற்கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவரின் இறப்புக்கு காரணமான மற்றும் மற்றொருவருக்கு காயத்தை விளைவித்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு இந்தோனேசியாவைச் சேர்ந்த செம்பனை வெட்டுபவர் ஒருவர் இன்று தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

எனினும், குற்றஞ்சாட்டப்பட்ட 39 வயதான சுதியொனொவிற்கு செவிதிறன் குறைபாடு இருப்பதாலும் அவருக்கு மலாய் மொழி புரியாததாலும் அவரிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

சம்பவத்தின்போது, ஹொண்டா ஈ.எக்ஸ்5 மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அந்நபர், ஹொண்டா வரியொ ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 18 வயதான அடாம் ஃபைசாலின் மரணத்திற்குக் காரணமான வகையில் அபாயகரமாக வாகனம் செலுத்தியதாக முதலாவது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு, 18 வயதான முஹமட் முவாம்மார் இஸ்மாயில் என்ற மற்றொரு மாணவருக்கும், காயம் ஏற்படும் அளவிற்கு அதே செயலைப் புரிந்ததாக அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

முதலாவது குற்றச்சாட்டிற்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 50,000 ரிங்கிட் அபராதமும் விதிக்க வகை செய்யும் 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்‌ஷன் 41(1)-இன் கீழும், இரண்டாவது குற்றச்சாட்டிற்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 15,000 ரிங்கிட் அபராதமும் விதிக்க வகை செய்யும் அதே சட்டம், செக்‌ஷன் 42(1)-இன் கீழும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

5,000 ரிங்கிட் ஜாமீன் தொகையில், ஒரு உள்நாட்டு பிரஜை மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் முதலாளி ஆகிய இருவரின் உத்தரவாதத்தின் பேரில் சுதியொனொவை விடுவிக்க மாஜிஸ்திரேட் நைடத்துல் அத்திரா அஸ்மான் அனுமதி அளித்தார்.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]