ஈப்போ, 14 மார்ச் (பெர்னாமா) -- மற்றவர்களின் மதத்திற்கும் இனத்திற்கும் மதிப்பளிக்காமல் ஒற்றுமையை சீக்குலைக்கும் வகையில் எழுந்து வரும் இனவாத கருத்துகளும் பதிவுகளும் நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.
இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசாங்கமும் தயாராக உள்ளதால், தேசியப் போலீஸ் படைத் தலைவர் தெரிவித்திருப்பது போல், சம்ரி வினோத்தும் தமிம் டாஹ்ரி-யும் தாய்லாந்தில் அடைக்கலம் நாடியிருந்தால் அவர்களை கண்டுபிடிக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சட்ட மற்றும் கழகச் சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் கேட்டுக் கொண்டார்.
உண்மையிலே அவர்கள் தலைமறைவாகிவிட்டனரா அல்லது விடுமுறைக்கு சென்றுள்ளார்களா என்பது தெரியவில்லை என்றாலும், தற்போது அவர்கள் நாட்டில் இல்லை என்பதை மட்டும் போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளதாக குலசேகரன் கூறினார்.
"அவ்வாறு யாரேனும் அவர்களை தாய்லாந்தில் காண நேர்ந்தால் போலீசாரிடம் தெரிவியுங்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது. இவ்விவகாரம் குறித்து தாய்லாந்து போலீசும் மலேசிய போலீசாரும் அழைத்து பேசவிருக்கின்றனர். அவர்களைக் கைது செய்த பின்னர் விசாரணை மேற்கொண்டு பின்னர் நீதிமன்றத்தில் அவர்கள் குற்றம் சாட்டப்படுவர்," என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் இத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் Datuk Seri Mohd Khalid Ismail கூறியதைத் தொடர்ந்து அவர்களைத் தேடுவதற்கான செயல்முறையைத் துரிதப்படுத்த அனைத்து அமலாக்கத் தரப்பினரும் முனைப்புக் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"இதற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகலை தாமதப்படுத்தக்கூடாது. உடனுக்குடன் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் பொதுமக்கள் இன்னும் சினமுடன் தான் இருக்கின்றனர். நேற்றுகூட பிரதமர் அலுவலக முன்புறத்தில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேட்பதற்கு இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு நாட்டிற்குள் ஒற்றுமை சீர்குலைந்தால் அது சுற்றுலா பயணிகளின் வருகையையும் கணிசமாக பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்," என்றார் அவர்.
இந்தியர்களின் ஒற்றுமை மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி திரட்டும் வகையில், இன்று காலை மணி 9 அளவில் பேராக், ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் 780 மோட்டார் சைக்கிள்களை உட்படுத்திய அணிவகுப்பை தொடக்கி வைத்த பின்னர் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அவர் அதனைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)