கிள்ளான், மார்ச் 13 (பெர்னாமா) -- கடந்த வாரம், கிள்ளான், காப்பாரில், மோட்டார் சைக்கிள் ஒன்றை நான்கு சக்கர வாகனத்தால் மோதி, அதில் பயணித்த இரு ஆடவர்களில் ஒருவருக்கு மரணம் விளைவித்ததாக, வர்த்தகர் ஒருவர் இன்று மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
மஜிஸ்திரேட் ஏ.கார்த்தியாயணி முன்னிலையில் வாசிக்கப்பட அக்குற்றச்சாட்டை புரிந்துக் கொண்டதாக 49 வயதான ஆர்.கணேச லிங்கம் தலையசைத்தார்.
எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டு இருப்பதால் அவரிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த மார்ச் ஐந்தாம் தேதி, கிள்ளான், Jalan Keretapi Lama Off ஜாலான் காப்பார், பத்து 12, தாமான் ஶ்ரீ காப்பாருக்கு நுழையும் சாலையில், 33 வயதுடைய கே. தினேஸ் குமாருக்கு மரணம் விளைவித்ததாக அவ்வாடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறை மற்றும் 12-க்கும் குறையாத பிரம்படிகள் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் Seksyen 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
தடயவியல் அறிக்கைக்காக காத்திருப்பதால் இவ்வழக்கின் மறு செவிமடுப்பை வரும் ஏப்ரல் 22-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)