Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

31 லட்சம் மதிப்புள்ள ஷாபு வகை போதைப்பொருள் பறிமுதல்

12/03/2026 06:14 PM

சுங்கை பட்டாணி, மார்ச் 12 (பெர்னாமா) -- கடந்த செவ்வாய்க்கிழமை, கெடா, கோத்தா கோல மூடா, கம்போங் பெர்மாத்தாங் -இல் உள்ள ஒரு தங்கும் விடுதியில், 31 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 62 கிலோகிராம் எடைக் கொண்ட ஷாபு வகை போதைபொருளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில், உள்நாட்டு கணவன் மனைவி தம்பதி உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த 47 வயதான முதல் சந்தேக நபர் கம்போங் பெர்மாதாங் ரெங்கான் சாலை ஓரத்தில் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து 150 கிராம் ஷாபு வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இன்று கோல மூடா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது கெடா மாநில போலிஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா கூறினார்.

பின்னர், அந்நபரை சம்பந்தப்பட்ட தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றபோது அங்கு 62 கிலோகிராம் எடைக் கொண்ட ஷாபு மறைத்து வைக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டதாக, அட்ஸ்லி தெரிவித்தார்.

முதல் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியில் வாடகைக்கு இருக்கும் 42 மற்றும் 43 வயதுடைய தம்பதியும் கைது செய்யப்பட்டதாக, அவர் கூறினார்.

அம்மூவரும், கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஏழு நாள்களுக்குத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்‌ஷன் 39B-இன் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)