கோலாலம்பூர், மார்ச் 11 (பெர்னாமா) -- டத்தோ ஶ்ரீ ஷம்சூல் இஸ்கண்டார் முஹ்மட் அகின் தொடர்பான ஊழல் வழக்கில், கடந்த ஆண்டு அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட போதிலும், விசாரணை தொடர்வதைத் தடுக்கும் எந்த சட்டப் பிரிவும் இல்லை என்று அரசு தரப்பு இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
நீதிபதி சுசானா ஹுசேன், முன்னிலையில் அவ்வழக்கு விசாரணையின்போது, ஷம்சூல் இஸ்கண்டாரை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் டத்தோ அமிர் ஹம்சா அர்சாட், அவ்விவகாரத்தை எழுப்பியபோது, அரசு தரப்பு துணை வழக்கறிஞர் ஃபாரா எஸ்லின் யூசோப் கான் அதனை அறிவித்தார்.
ஷம்சூல் இஸ்கண்டாருக்கு எதிரான விசாரணை நிறைவடைந்து விட்டதா அல்லது இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறதா என்பதை தமது தரப்பு உறுதிப்படுத்த விரும்புவதாக, அமிர் ஹம்சா முன்னதாக நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.
அதோடு, இவ்வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி, அதன் செவிமடுப்பை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கும்படி தமது தரப்பு, கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி விண்ணப்பம் ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, வழக்கை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை அரசு தரப்பு ஆட்சேபிக்கும் என்று ஃபாரா எஸ்லின் கூறினார்.
மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம், செக்ஷன் 51Aவின் கீழ், இவ்வழக்கு தொடர்பான சில ஆவணங்களை எதிர் தரப்பினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு, மே 8-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)