கோலாலம்பூர், 09 மார்ச் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கான முடிவுகள் வரும் மார்ச் 31-ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது.
அன்றைய நாளில் காலை 10 மணி முதல் மாணவர்கள், தங்களின் பள்ளிகளில் தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட முறையில் இத்தேர்வை எழுதிய மாணவர்கள் தங்களது முடிவுகளைப் பெற பதிவு செய்த மாநில கல்வித் துறையைத் தொடர்பு கொள்ளலாம்.
நாடு முழுவதிலும் உள்ள 3,350 தேர்வு மையங்களில் நடைபெற்ற இத்தேர்வில் மொத்தம் 4 லட்சத்து 13 ஆயிரத்து 299 மாணவர்கள் பதிந்துக் கொண்டுள்ளதாக, கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வழங்குவதற்கான நிர்வகிப்புகள் சீராக நடைபெற வேண்டும் என்று பள்ளி தரப்பினர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், தேர்வு எழுதிய மாணவர்கள் myresultspm.moe.gov.my என்ற அகப்பக்கத்தின் வழியாக தங்களின் தேர்வு முடிவுகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
அதோடு, எஸ்.பி.எம் அடையாள அட்டை எண் மற்றும் தேர்வு பதிவு எண்ணை எழுதி 15888 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்விரு செயல்முறைகளும் மார்ச் 31 காலை மணி 10 தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை மாலை மணி 6 வரை பயன்பாட்டில் இருக்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)