புத்ராஜெயா, 09 மார்ச் (பெர்னாமா) -- உதவித் தொகையில் விற்கப்படும் சமையல் எண்ணெயை கடத்தவோ அல்லது தவறாகப் பயன்படுத்தவோ முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் அறிவுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் தங்கள் பொறுப்புகளைத் திறன்பட நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
''2026 மார்ச் முதலாம் தேதி முதல் மலேசியர் அல்லாதவர்களுக்கு 1 கிலோ உதவித் தொகை சமையல் எண்ணெயை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் தடை விதித்துள்ளோம். இது பொருத்தமானது. குடிமக்கள் அல்லாதவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது எப்படிச் சாத்தியமாகும்? அலமாக்கம் பயனுள்ளதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். யாராவது கடத்தல் போன்றவற்றைச் செய்ய முயன்றால் நாம் நமது நடவடிக்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும்'', என்றார் அவர்.
தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் இடையிலான உள்நாட்டு விமான பயணங்களுக்கு வழங்கப்பட்ட 400 ரிங்கிட் மதிப்புள்ள FlySiswa விமான டிக்கெட் உதவித் தொகை, கடந்த ஆண்டு 44,000 மாணவர்களுடன் ஒப்பிடும்போது இவ்வாண்டு 50,000 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு, FlySiswa திட்டத்தை விரிவுப்படுத்த மார்ச் 4-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்ததாக பிரதமர் தெரிவித்தார்.
''இன்னும் புகார்கள் இருப்பதால், மார்ச் 4-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம், விமானப் பயணங்களுக்கான உதவித்தொகையை விரிவுபடுத்த ஒப்புதல் அளித்தது. பொதுப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தற்போது அஸ்வாரா, மனிதவளத் துறை பயிற்சி நிறுவனம், அரசு உதவி பல்கலைக்கழகங்கள், மாநில அரசுக்குச் சொந்தமான உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தோட்ட மற்றும் மூலப்பொருள் நிறுவனம் ஆகியவை அடங்கும்'', என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)