Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான சட்டப்பூர்வ கோரிக்கை பத்திரம்; கெஅடிலான் மீண்டும் செயலாக்கம்

07/03/2026 05:08 PM

கோலாலம்பூர், மார்ச் 07 - 14-ஆவது பொது தேர்தலுக்குப் பின்னர் வேட்புமனு நிபந்தனைகளை மீறியதுடன் கட்சிக்கு துரோகம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான சட்டப்பூர்வ கோரிக்கை பத்திரத்தை கெஅடிலான் கட்சி மீண்டும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

கெஅடிலான் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ சுரைடா கமாருடினுக்கு எதிரான வழக்கில் கட்சிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதன் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

ஒப்பந்தத்தை மீறும் எந்தவொரு நபரும், போட்டியிட்ட இடத்தில் வெற்றி பெற்ற பிறகு கட்சியை விட்டு வெளியேறும் முடிவுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உறுதிச் செய்ய இந்நடவடிக்கை அவசியம் என்றும் அவர் விவரித்தார்.

"தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பி.கே.ஆர் பிரதிநிதிகளுக்கும் நாங்கள் இப்பிரிவைச் செயல்படுத்துகின்றோம். 14-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, நான் உட்பட அனைவரும் கட்சியின் பத்திரத்தில் கையெழுத்திட்டோம். அதனை மீறினால், இதுதான் விளைவு. எனவே, நாங்கள் பார்த்தபோது ஒரு முன்னுதாரணம் உள்ளது. சுரைடா வழக்கில் நீதிமன்ற முன்னுதாரணங்கள். எனவே, துரோகம் செய்த அனைவருக்கும் எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது," என்றார் அவர்.

இன்று கோலாலம்பூர், லெம்பா பந்தாயில் உள்ள பிபிஆர் கெரிஞ்சியில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு தேசிய தகவல் பரப்பு மையம் நாடியின் Bazaar Raya நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.     

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)