Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

குர்ஆனை மிதித்த பல்கலைக்கழக மாணவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

03/03/2026 11:53 AM

குவந்தான், 03 மார்ச் (பெர்னாமா) -- அல் - குர்ஆனை மிதித்து, அதன் படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாகச் சந்தேகிக்கப்படும் உயர்கல்வி மாணவர் ஒருவர் இன்று காலை பகாங், குவந்தான் செஷன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட 21 வயதான எஸ். விக்னேஸ்வரன் மீது, கடந்த மாதம் குர்ஆனை அவமதித்ததாகவும், சமூக ஊடகங்களில் மிகவும் அருவருக்கத்தக்கப் பதிவுகளைப் பகிர்ந்ததாகவும் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நீதிபதி ஹர்மி தம்ரி முஹமட் முன்னிலையில் வாசிக்கப்பட்ட இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து, விக்னேஸ்வரன் விசாரணை கோரினார்.

பிப்ரவரி 22-ஆம் தேதி தாமான் செரி மகோத்தா, ஜாலான் கம்பாங் எனும் இடத்தில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன், முஸ்லிம்களால் புனிதமாகப் போற்றப்படும் குர்ஆனை, அந்நபர் அவமதித்துள்ளதாகக் குற்றம் பதிவாகியுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 295-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

த்ரெட்ஸ் சமூகத் தளத்தில், மற்றவர்களைப் புண்படுத்தும் நோக்கத்துடன் மிகவும் அருவருக்கத்தக்கப் பதிவுகளைப் பதிவேற்றம் செய்ததாக அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இக்குற்றச்சாட்டு 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், செக்‌ஷன் 233(1)(a) மற்றும் அதே சட்டம் செக்‌ஷன் 233(2) இன் கீழ்  விசாரிக்கப்படுகிறது.

இரண்டாவது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஐந்து லட்சம் ரிங்கிட்  அபராதம் அல்லது அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

10,000 ரிங்கிட் ஜாமீனில் அம்மாணவர் விடுவிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு மாதமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)