கோலாலம்பூர், 26 பிப்ரவரி (பெர்னாமா) -- 13 மலேசியர்கள் இன்னும் ஈரானில் தங்கியிருப்பதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவுக்கு மீண்டும் அழைத்து வர உதவிகள் வழங்கப்பட்ட போதிலும் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில், அவர்கள் அந்நாட்டில் தங்குவதற்கு முடிவு செய்தததாக டத்தோ ஶ்ரீ முஹமாட் ஹசான் தெரிவித்தார்.
மேலும், அவர்கள் எடுத்துள்ள அந்த முடிவுக்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
''திரும்பி வர விரும்பாதவர்கள் உள்ளனர், அவர்களில் 13 பேர் இப்போதும் ஈரானில் உள்ளனர். நாங்கள் அவர்களை மீண்டும் அழைத்து வர விரும்பினாலும், அவர்கள் வரவில்லை. அதனால் இழப்பீட்டுக் கடிதத்தில் கையெழுத்திடுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டோம். அவர்கள் திரும்பி வர விரும்பவில்லை, அது அவர்களின் சொந்த விருப்பம்,'' என்றார் அவர்.
கடந்த ஜனவரி 18-ஆம் தேதி, தெஹ்ரானில் உள்ள மலேசிய தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரையும் பிப்ரவரி இரண்டாம் தேதி, மலேசிய தூதர் உள்ளிட்ட அதிகாரிகளையும் மலேசிய அரசாங்கம் மீண்டும் நாட்டிற்குள் அழைத்து வந்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]