Ad Banner
Ad Banner
 பொது

கால்நடை வியாபாரிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை

25/02/2026 06:55 PM

மலாக்கா, 25 பிப்ரவரி (பெர்னாமா) -- ஒருவருக்கு மரணத்தை விளைவிக்கக் கூடிய உடல் ரீதியான காயத்தை ஏற்படுத்தியதாக திருத்தப்பட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கால்நடை வியாபாரிக்கு புதன்கிழமை ஆயர் கெரோ செஷன் நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நீதிபதி ரொஹாதுல் அக்மார் அப்துல்லா முன்னிலையில், நீதிமன்றத்தின் மொழிப்பெயர்ப்பாளர் திருத்தப்பட்ட அக்குற்றச்சாட்டை வாசித்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட எம். மகேஸ்வரன் அதனை ஒப்புக் கொண்டார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர், எஸ். மணிக்குமாருக்கு மரணத்தை விளைவிக்கக்கூடிய அளவிற்குல் உடலில் காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு, அவர் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக மகேஸ்வரன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ஜாசின், செலண்டார், எம்பாஙான் ஜூசிற்கு அருகில் உள்ள செம்பனை காட்டுப் பகுதியில், 2016-ஆம் ஆண்டு மே 22 லிருந்து 23-ஆம் தேதிக்குள் அவர் அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.

அவர் மீது, கொலைக்கு சமமற்ற குற்றத்திற்காக, அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 304(a)-இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு, அவர் கைது செய்யப்பட்ட 2022-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதியில் நடைமுறைக்கு வரும் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து ரொஹதுல் அக்மார் தீர்ப்பளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)