கோலாலம்பூர், பிப் 23 - அடுத்த ஒன்று இரண்டு மாதங்களுக்குள் அனைத்து சோதனை நடவடிக்கைகள், அதிகாரப்பூர்வ அங்கீகாரம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களின் தீர்வு ஆகியவற்றிற்குப் பின்னர், ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே எல்.ஆர்.டி3 இரயில் சேவை செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
22 ரயில்களில் 14 ரயில்கள், அவற்றின் தோல்வியற்ற பாதுகாப்பான ஓட்டம் FFR சோதனைகளை நிறைவு செய்துள்ளதாகக் கூறிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், எஞ்சிய எட்டு ரயில்கள் இன்னும் 22 நாள்களுக்கு சோதனை செயல்முறைக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
"நேற்று வரை இன்னும் சில தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன, மேலும் இந்த அனைத்து FFR சோதனைகளும் அனைத்து ரயில்களிலும் மேற்கொள்ளப்பட்ட பிறகு, அடுத்த செயல்முறை தொடரும். அதாவது சோதனை மற்றும் இயக்குதல் ஆகியவை தரைப் போக்குவரத்து ஆணையத்தால் மேற்கொள்ளப்படும். மேலும் இவை அனைத்தும் அடுத்த ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார் அவர்.
இன்று மேலவையில் பதிலளித்த அவர் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, Prasarana Malaysia நிறுவனம் தற்போது தனது திட்டத்தையும் அது தொடர்புடைய அனைத்து சோதனைகளையும் நிறைவு செய்வதை துரிதப்படுத்தி வருகிறது.
இதனால் வரும் ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே எல்.ஆர்.டி3 தனது சேவையைத் தொடங்கலாம் என்று லோக் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேவேளையில், எல்.ஆர்.டி3 செயல்பாட்டில் ஏற்பட்ட தாமதம், திட்ட செலவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என்ற கூற்றையும் அவர் மறுத்தார்.
கணினி சோதனை செயல்பாட்டின் போது எழுந்த தொழில்நுட்ப கோளாறே திட்ட தாமதத்திற்கான காரணம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)