Ad Banner
Ad Banner
 பொது

கிரிப்தோ நாணயக் கொள்ளை சம்பவம்; கைது செய்யப்பட்ட 12 போலீசாருக்கு பணிகளைத் தொடர மறுப்பு

21/02/2026 05:27 PM

செராஸ், பிப்ரவரி 21 (பெர்னாமா) -- இம்மாத தொடக்கத்தில் வெளிநாட்டவருக்குச் சொந்தமான KRIPTO நாணயத்தைக் கொள்ளையிட்டது தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுத்து வைக்கப்படிருக்கும் 12 போலீஸ் அதிகாரிகள் விசாரணை முழுமையாக நிறைவு பெறும் வரையில் தங்களின் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

இவ்விவகாரத்தை தமது தரப்பு மறுக்கவில்லை என்று கூறிய தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில், எவ்விதமான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீஸ் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்தார்.

"அவர்களின் தொடர்புடைய அறிக்கைகளை நாங்கள் கொண்டு வருகிறோம். அதன் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுப்போம். எங்கள் விசாரணை முறையாகவும் முழுமையாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக, தற்போதைக்கு நாங்கள் அவர்களுக்கு எவ்வித பணிகளையும் வழங்கவில்லை," என்றார் அவர்.

இன்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் Yayasan Seri Negara உதவியளிப்பு மற்றும் PBLT நிறுவனத்தின் Zakat Wakalah ஒப்படைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர் சந்திப்பில் அவ்வாறு கூறினார்.  

இதனிடையே, காஜாங்கில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பில்,  பிப்ரவரி 6-ஆம் தேதி புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 12 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் உறுதிப்படுத்தியிருந்தார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 395:397 கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)