கோலாலம்பூர், 20 பிப்ரவரி (பெர்னாமா) -- தேசிய சட்டத்துறை தலைவர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் பொறுப்புகளைப் பிரிப்பது தொடர்பான சட்ட மசோதாவும், பிரதமர் பதவிக் காலக்கட்டத்திற்கான வரம்பு குறித்த சட்ட மசோதாவும் வரும் திங்கட்கிழமை முதலாம் வாசிப்புக்காக மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.
தேசிய சட்டத்துறை தலைவர் மற்றும், அரசு தரப்பு வழக்கறிஞர்களின் பொறுப்புகளை பிரிப்பது குறித்த சட்ட மசோதாவின் இரண்டாம் வாசிப்பு மார்ச் 2 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்ட மற்றும் கழகச் சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர், டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.
பிரதமர் பதவிக் கால வரம்புகள் குறித்த சட்ட மசோதாவின் இரண்டாம் வாசிப்பு மார்ச் 3-ஆம் தேதி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமே தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தேசிய சட்டத்துறை தலைவர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆகியோரின் கடமைகளைப் பிரிப்பது, கழகச் சுதந்திரத்தின் கொள்கையை வலுப்படுத்துவதையும், நாட்டின் சட்ட அமைப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது, அரசு தரப்பு வழக்கறிஞரின் நிலை, படிநிலை மற்றும் சேவை அடிப்படையில், தேசிய சட்டத்துறை தலைவருக்கு இணையானது என்பதை விவரிக்கும்.
மேலும், ஒரு அரசு தரப்பு வழக்கறிஞருக்கான முக்கிய அளவுகோல்களை நிர்ணயிப்பதோடு, வழக்குகளில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவமும், ஏழு ஆண்டு நியமன காலமும் இருக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று, உள்நாட்டு ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களுடன் நடைபெற்ற, சம்பந்தப்பட்ட சட்ட மசோதா விவகாரம் குறித்த விளக்கமளிப்பு நிகழ்ச்சியில் அசாலினா அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)