கோலாலம்பூர், 20 பிப்ரவரி (பெர்னாமா) -- சீனப் பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறை இவ்வார இறுதியில் நிறைவடைவதோடு, ரமலான் மாதமும் தொடங்கி இருப்பதை அடுத்து, கிள்ளான் பள்ளத்தாக்கை நோக்கிச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்பதால் தங்களின் பயணங்களைத் திட்டமிடுமாறு, WCE எனும் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை நிறுவனத்தினர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மாலையிலிருந்து நள்ளிரவு வரை கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு நுழையும் சாலைகளில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், தினசரி வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60-ஆயிரத்தைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக பண்டிகைக் கால விடுமுறை முடிந்து நகர்ப் புறங்களுக்கு திரும்பும் மக்களின் எண்ணிக்கைக்கு மாறாக, ரமலான் தொடங்குவதற்கு முன்னதாக மக்கள் தங்கள் தினசரி வழக்கங்களுக்குத் திரும்ப வேண்டியிருப்பதால் இம்முறை திரும்பும் பயணம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, இன்று ஓர் அறிக்கையில் WCE கூறியது.
எனவே, தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும், போக்குவரத்து தகவல்களைத் தெரிந்துகொள்ள WCE செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறும் அவ்வறிக்கையின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சாலைப் பயனர்கள் தங்கள் வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதையும் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிசெய்து கொள்வதோடு, வேக வரம்பைக் கடைப்பிடிக்கவும், பாதுகாப்புப் பட்டையை அணிவது மட்டுமல்லாமல் எப்போதும் விழிப்பு நிலையில் இருக்குமாறு WCE வலியுறுத்தியது.
அதுமட்டுமின்றி, அவசரப் பாதைகள் மோட்டார் சைக்கிளுக்கான சிறப்பு பாதைகள் அல்ல என்றும், அவை முற்றிலும் அவசரப் பயன்பாட்டிற்கானவை என்றும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு அந்நிறுவனம் நினைவுறுத்தியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)