Ad Banner
 பொது

உள்நாட்டவர்களை உட்படுத்தியே அதிகமான காசநோய் சம்பவங்கள் பதிவு

18/02/2026 05:16 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 18 (பெர்னாமா) -- தற்போது நாட்டில் பதிவாகி வரும் காசநோய் சம்பவங்களில், 85 விழுக்காடு உள்நாட்டினரை உட்படுத்தியதாகும்.

எஞ்சிய, 15 விழுக்காட்டு சம்பவங்கள் மட்டுமே வெளிநாட்டவரை உட்படுத்தியது.

எனவே, வெளிநாட்டினரின் வருகையை காசநோய்ப் பரவலுடன் தொடர்புப்படுத்தி கூறுவது தவறானது என்று தெரிவித்த சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட், உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே இந்நோய்த்தொற்று அதிகம் பரவியுள்ளதாக, சுகாதார அமைச்சின் அண்மைய தரவுகள் காட்டுவதை சுட்டிக்காட்டினார்.

இந்த அதிகரிப்பு மக்கள் மத்தியில் இந்நோய்ப் பரவும் ஆபத்தைக் காட்டுவதோடு, அலட்சியமாக எடுத்து கொள்ள முடியாத நிலைமையையும் உணர்த்துவதாக முகநூல் பதிவில் டாக்டர் சுல்கிஃப்லி கூறியிருந்தார்.

பொது சுகாதாரத்தின் அடிப்படையில் காசநோய் புதிதான ஒன்றல்ல என்றும், அது நீண்டகாலமாகவே இருந்தாலும், அனைத்து தரப்பினரிடமிருந்தும் தீவிர கவனம் தேவைப்படுவதாகவும் அவர் விவரித்தார்.

மேலும், காசநோய் என்பது வெறும் மருத்துவத்தை உட்படுத்தி மட்டுமல்லாமல், கூட்ட நெரிசல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சமூகப் பொருளாதார காரணங்களுடனும் அந்நோய் பிணைக்கப்படுவதாக அவர் அப்பதிவில் தெரிவித்தார்.

இதனிடையே, இந்நோய்க் கண்டிருப்பவர்களைத் தனிமைப்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தாம் அறிவுறுத்துவதாகக் கூறிய Dr Dzulkefly, நோயாளிகள் தங்களுக்கான சிகிச்சையை முழுமையாக நிறைவு செய்ய குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் ஆதரவும் மிக அவசியமாகிறது என்று கோடிகாட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)