Ad Banner
 உலகம்

மோதலை அமைதியாகத் தீர்க்க தெஹ்ரானில் அச்சத்தை ஏற்படுத்துவது அவசியமாக இருக்கலாம் - டிரம்ப்

14/02/2026 04:14 PM

வாஷிங்டன் டி.சி., 14 பிப்ரவரி (பெர்னாமா) -- ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் கடினமாக உள்ளதாகவும், இந்த மோதலை அமைதியான முறையில் தீர்க்க தெஹ்ரானில் அச்சத்தை ஏற்படுத்துவது அவசியமாக இருக்கலாம் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் அமெரிக்க துருப்புக்களிடம் பரிந்துரைத்திருக்கின்றார்.

மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புவதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது கடினம் என்று வட கரோலினாவில் உள்ள ஃபோர்ட் பிராக் இராணுவ தளத்தில் டிரம்ப் ஈரானியர்களைப் பற்றி கூறினார்.

உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை பயன்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் அதை தங்கள் தரப்பு தயாராக வைத்திருப்பதாகவும் முன்னதாக அவர் கூறினார்.

''அமெரிக்கா மீண்டும் வெற்றி பெறுகிறது. அமெரிக்கா மீண்டும் மதிக்கப்படுகிறது. மிக முக்கியமாக, உலகம் முழுவதும் உள்ள எதிரிகள் அஞ்சுகிறார்கள். அவர்கள் நமக்கு அஞ்சுகிறார்கள். உங்களுக்குத் தெரியும், நான் பயம் என்று சொல்ல விரும்பவில்லை. ஆனால், சில நேரங்களில் நீங்கள் பயப்பட வேண்டும். ஏனென்றால், அதுதான் நிலைமையை உண்மையில் கவனித்துக்கொள்ளும் ஒரே விஷயம். ஈரானுக்கு மிகப் பெரிய விமானக் குழுவை அனுப்பிய ஒரு சூழ்நிலை இப்போது நமக்கு உள்ளது. நாம் ஒரு ஒப்பந்தம் செய்ய முடியுமா என்று பார்க்க விரும்புகிறேன். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்வது கடினமாக இருந்தது,'' என்றார் அவர்.

கடந்த வாரம் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஓமன் வழிவகுத்தது.

அதோடு, இது வாஷிங்டனின் தீவிரத்தை அளவிட தெஹ்ரானுக்கு வாய்ப்பை ஏற்படுத்தியதாகவும், அரச தந்திரம் தொடர போதுமான ஒருமித்த கருத்தைக் காட்டியதாகவும் ஈரானின் வெளியுறவு அமைச்சு, செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அமெரிக்கா-ஈரான் இடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)